அப்பம் பிட்குதல்
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும், எவ்வளவு இன்பமுமானது. அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்கு பெறுகிறபடியால், அநேகராகிய நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
நான் அவருடைய கூடாரத்திலே ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப்பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன். சமாதான வாழ்த்துதல்
நின்றவண்ணமாக ஜெபம் செய்வோம்.
பரிசுத்த பிதாவே, உமது கிருபாசனத்தண்டையில் பிரவேசிப்பதற்குப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உமது அருமையான குமாரனின் இரத்தத்தினால் எங்களுக்கு உண்டு பண்ணினீரே; நாங்கள் அபாத்திரராயினும் அவர் மூலமாக உம்மண்டை வருகிறோம். எங்களையும் இந்தக் காணிக்கையையும், உம்முடைய நாம மகிமைக்காக அங்கிகரித்து உபயோகிக்கும்படியாக, தாழ்மையோடு வேண்டிக் கொள்ளுகிறோம். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள். உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.
முழங்கால் படியிட்டு ஜெபம் செய்வோம்:
இயேசுவே, உத்தம பிரதான ஆசாரியரே, நீர் உமது சீஷர்கள் மத்தியில் பிரசன்னமாயிருந்தது போலவே, எங்கள் மத்தியிலும் பிரசன்னமாகி, அப்பத்தைப் பிட்கையில் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியருளும். நீரே பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும், சதாகாலமும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிறீர். ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக: சபை: அவர் உமது ஆவியோடு இருப்பாராக.
குரு: உங்கள் இருதயத்தை உயர்த்துங்கள்: சபை: எங்கள் இருதயத்தை ஆண்டவரிடத்தில் உயர்த்துகிறோம்.
குரு: நம்முடைய ஆண்டவராகிய கடவுளுக்குத் தோத்திரம் செலுத்தக் கடவோம்: சபை: அப்படிச் செய்வது தகுதியும் நீதியுமாயிருக்கிறது.
ஆண்டவரே, பரிசுத்த பிதாவே, சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, நாங்கள் எக்காலத்திலும், எவ்விடத்திலும் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறது தகுதியும் நீதியும் எங்களுக்கு விசேஷித்த கடமையுமாயிருக்கிறது.
உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீர் வானங்களையும் பூமியையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தீர். மனுக்குலத்தையும் உமது சாயலாக உண்டாக்கினீர். மனுக்குலம் பாவத்தில் விழுந்த போது புது சிருஷ்டியின் முதற்பலனாக நீர் மனுக்குலத்தை மீட்டுக் கொண்டீர்.
ஆதலால் தூதரோடும், பிரதான தூதரோடும், பரமசபையனைத்தோடும் நாங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தி, சேனைகளின் கர்த்தராகிய தேவனே, நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன. உன்னதமானவராகிய தேவரீருக்கே மகிமை உண்டாவதாக என்று, இடைவிடாமல் உம்மைத் தோத்தரிக்கிறோம்.
கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும், வருகிறவருமானவர் தோத்தரிக்கப்பட்டவர். உன்னதத்தில் ஒசன்னா.
ஆம் பிதாவே நீர் பரிசுத்தர். நீர் தோத்தரிக்கப்பட்டவர். தேவரீர் மனிதரில் உருக்கமாய் அன்புகூர்ந்து உமது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து எங்கள் தன்மையைத் தரித்துக் கொள்ளவும், சிலுவையில் மரித்து எங்களை மீட்டுக் கொள்ளவும், அவரைத் தந்தருளினீரே: அவர் சிலுவையில் ஒரே தரம் தம்மைத்தாமே ஏக பலியாக ஒப்புக்கொடுத்து சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்வதற்கு நிறைவும், பூரணமும், போந்ததுமான பலியையும், காணிக்கையையும், பரிகாரத்தையும் செலுத்தினதுமல்லாமல், தமது அருமையான மரணத்தை என்றைக்கும் நினைப்பூட்டும் ஞாபகத்தை நியமித்து, தாம் திரும்ப வருமளவும், நாங்கள் அதை அனுசரித்துவரும்படி, தமது பரிசுத்த சுவிசேஷத்தில் கட்டளையிட்டருளினாரே; அவர் தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு சீஷர்களுக்குக் கொடுத்து, “நீங்கள் வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்: என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் ” என்றார்.
அப்படியே போஜனம் பண்ணின பின்பு, அவர் பாத்திரத்தையும் எடுத்து தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: “நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்: இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும் அநேகருக்காகவும் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்; இதைப் பானம் பண்ணும்பொழுதெல்லாம் என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள்” என்று திருவுளம்பற்றினார்.
ஆமென். கர்த்தாவே, உமது மரணத்தை நினைவு கூறுகிறோம். உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் திரும்பி வரக் காத்திருக்கிறோம். கிறிஸ்துவே உமக்கே தோத்திரம் உண்டாவதாக.
ஆதலால் பிதாவே, உமது குமாரனாகிய எங்கள் ஆண்டவரின் அருமையான பாடுகளையும், மரணத்தையும், மகிமையான உயிர்த் தெழுதலையும், பரமேறுதலையும் நினைவுகூர்ந்து உமது அடியார்களாகிய நாங்கள், அவருடைய கட்டளையின் படியே, அவர் திரும்பவருமளவும் அவரை நினைவு கூர்ந்து இதைச் செய்கிறோம். அவரில் நீர் எங்களுக்காக நிறைவேற்றின பூரண மீட்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
கர்த்தாவே, எங்கள் தேவனே, உம்மைத் துதிக்கிறோம். உம்மைப் புகழுகிறோம், உம்மை மகிமைப்படுத்துகிறோம்.
இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் பிட்கிற அப்பம், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம், கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உமது பரிசுத்த ஆவியால் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று மிகுந்த தாழ்மையோடு பிராத்திக்கிறோம். நாங்களெல்லாரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் கூட்டி இணைக்கப்பட்டவர்காளாகி, விசுவாசத்தில் ஒருமைப்படவும், தலையாகிய அவருக்குள் எல்லாவற்றிலேயும் வளரவும் கிருபை செய்யும். அவரோடும் பரிசுத்த ஆவியோடும் ஐக்கியமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய உமக்கு, அவர் மூலமாய் சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
நமது இரட்சகராகிய கிறிஸ்து கற்பித்தபடி அவரில் நமக்கு அருளப்பட்ட தைரியத்தோடே சொல்லுவோம்:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.
இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுயநீதியை நம்பி நாங்கள் உம்முடைய பந்தியில் சேரத்துணியாமல் தேவரீருடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேஜையின் கீழ் விழும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள் பாத்திரர் அல்ல. ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ்செய்கிற இலட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறார். ஆகையால் கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும் இரத்தத்தாலும் எங்கள் பாவமுள்ள சரீரமும், ஆத்துமாவும் சுத்தமாகி எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும் அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்றவிதமாய் அவருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்ததைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.
குரு: நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
லோகத்தின் பாவத்தைச் சுமர்ந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும். லோகத்தின் பாவத்தைச் சுமர்ந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும். லோகத்தின் பாவத்தைச் சுமர்ந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, உமது சமாதானத்தை தாரும்.
தோத்திர ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, பரம பிதாவே, உமது நேச குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் எங்களை உமது பிள்ளைகாக ஏற்றுக்கொண்டு, அவருடைய விலைமதியாத திருச்சரீரமும் இரத்தமுமாகிய ஞான ஆகாரத்தால் எங்களைப் போசித்திருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து, நித்திய ஜீவனை எங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறீர். அளவிடப்படாத இந்த நன்மைகளுக்காக உம்மைத் தோத்தரிக்கின்றோம். சரீரமும் ஆத்துமாவாகிய எங்களைப் பரிசுத்தமும் ஜீவனுள்ள பலியாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.இதுவே நாங்கள் செய்யத்தக்க ஆத்மீக ஆராதனை. நாங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேசந்தரியாமல், தேவரீருடைய நன்மையும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக எங்கள் மனம் புதிதாகிறதினாதாலே, மறுரூபமாகும்படிக்கு எங்களுக்கு அருள்புரியும். கடைசியில் நாங்கள் உமது பரிசுத்தவான்கள் அனைவரோடும் உமது நித்திய இராஜ்ஜியத்தின் ஆனந்ததைத் அடையத்தக்கதாக இவ்வுலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க எங்களுக்கு கிருபை செய்யும். உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாய் சதா காலமும் ஜீவித்து அராசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இவைகளை வேண்டிக்கொள்கிறோம்.
எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், தோத்திரமும், கனமும், வல்லமையும், பெலமும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.
எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களோடே இருந்து நீங்கள் தேவனையும் அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்படி உங்கள் இருதயத்தையும் சிந்தையும் காக்கக் கடவது. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியுமாகிய சர்வ வல்லமை பொருந்திய தேவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.