CSI இரண்டாம் ஆராதனை முறை
எல்லாரும் எழுந்து நிற்க, ஆராதனை நடத்துகிறவர்: நாம் கடவுளைத் தொழுவோம்.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். யோவான் 4:24
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோமர் 1:3
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24
**மாலை:** சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:5,7
**அட்வந்து:** கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:5,6
**கிறிஸ்துவின் பிறப்பு:** இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10,11
**லெந்து:** நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். யோவேல் 2:13
**பாடுபட்ட வரம்:** நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24
**உயிர்த்தெழுந்த திருநாள்:** இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 1 பேதுரு 1:3,4
**பெந்தகோஸ்தே:** நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. ரோமர் 5:5
எங்கள் தந்தையாம் கடவுளே, உமது வல்லமையாலும் ஞானத்தாலும் எல்லாவற்றையும் படைத்து, உமது குமாரனை எங்கள் இரட்சகராகத் தரும்படி உலகத்தில் அன்பு கூர்ந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். குமாரனாம் கடவுளே, பாவத்தைத் தவிர்த்து எல்லாவற்றிலும் எங்களைப் போல் மனிதனாகி, எங்கள் பாவங்கங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டு, எங்கள் நீதிக்காக உயிர்த்தெழும்பியரே, உம்மைப் போற்றுகிறோம். பரிசுத்த ஆவியானவராகிய கடவுளே, எல்லா உண்மைக்குள்ளும் எங்களை வழி நடத்தி, கடவுளின் அன்பை எங்கள் நெஞ்சில் பொழிகிறவரே, உம்மைப் போற்றுகிறோம். பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய கடவுளே உமக்கே எக்காலமும் எல்லாப் புகழும் உண்டாவதாக. ஆமென்.
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:8,9)
சர்வ வல்லமையுள்ள கடவுளிடத்தில் நாம் நமது பாவங்களைத் தாழ்மையோடு அறிக்கையிடுவோம்.
**ஜெபம் 1:** சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, தப்பிப் போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு வழுவி அலைந்து போனோம். எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்து வந்தோம். எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும் ஆண்டவரே தேவரீர் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச் செய்த வாக்குத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும்; பாவத்தினிமித்தம் துக்கப்படுகின்ற எங்களைச் சீர்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனித் தேவ பக்தியும், நீதியும், தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.
**ஜெபம் 2:** எங்கள் தந்தையாம் கடவுளே, நினைவினாலும் வார்த்தைகளினாலும் செய்கையினாலும் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்திருக்கிறோம். முழு மனதோடு நாங்கள் உம்மை நேசிக்கவில்லை. எங்களிடத்தில் நாங்கள் அன்பு கூறுவதுபோல அயலாரிடத்தில் நாங்கள் அன்பு கூறவில்லை. எங்கள்மேல் இரக்கமாயிருக்க உம்மை வேண்டிக்கொள்கிறோம். எங்கள் பாவ அழுக்கை நீக்கி எங்களைச் சுத்திகரியும். எங்கள் குற்றங்களை விட்டுவிட எங்களுக்கு உதவி புரியும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்
(சங்கீதம் 95 அல்லது 100 அல்லது நாளுக்குரிய சங்கீதம் பாடவோ வாசிக்கவோ வேண்டும்)
**முதலாம் பாடம்** (பழைய ஏற்பாடு அல்லது அப்போகரிப்பா)
(பின்வருவனவற்றுள் ஒன்று பாடப்படும் அல்லது வாசிக்கப்படும்: சகரியாவின் கீதம் / வாலிபர் மூவரின் கீதம் / கன்னிமரியாளின் கீதம் / திருச்சபையின் கீதம் / சிமியோனின் கீதம்)
**அருளுரை (Sermon)**
**அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்** வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.
**கர்த்தருடைய ஜெபம்** பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.
1. சமாதானத்துக்குக் காரணரும் ஏக சிந்தையை விரும்புகிறவருமாகிய கடவுளே, உம்மை அறிவதே நித்திய ஜீவன், உம்மைச் சேவிப்பதே மெய்ச் சுயாதீனம், தேவரீரைத் தஞ்சமாகக் கொண்டிருக்கிற உமது அடியாராகிய நாங்கள், எந்த விரோதிகளுடைய வல்லமைகளுக்குப் பயப்படாதிருக்கும்படியாக எங்கள் சத்துருக்கள் செய்யும் எல்லா பிரயத்தனங்களின்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் எங்களைக் காப்பாற்றியருளும். ஆமென்.
2. சகல பரிசுத்த விருப்பங்களுக்கும் சகல நல்லோசனைகளுக்கும், சகல நீதியான கிரியைகளுக்கும் காரணமாகிய கடவுளே, உலகம் தரக்கூடாத சமாதானத்தை உமது அடியாராகிய எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க மன உற்சாகமுள்ளவர்களாயிருந்து, சத்துருக்கள் பயமில்லாமல் உம்மாலே காக்கப்பட்டு, ஆறுதலோடும் அமைதலோடும் எங்கள் ஜீவ காலத்தைப் போக்குவதற்கு எங்கள் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் புண்ணியங்களினிமித்தம் கிருபை செய்தருளும். ஆமென்.
1. சர்வ வல்லமையுடைய நித்திய கடவுளே, இந்நாள் வரையும் எங்களைச் சுகமாய் நடத்தி வந்த எங்கள் பரம பிதாவாகிய ஆண்டவரே. இந்நாளிலும் உமது மிகுந்த வல்லமையால் எங்களைக் காப்பாற்றி, நாங்கள் யாதொரு பாவத்துக்கு உட்பட்டாலும், எந்தவிதமான மோசத்துக்கும் அகப்படாமலும் உமது பார்வைக்கு நீதியாயிருக்கிறதை எப்பொழுதும் செய்கிறதற்கு நாங்கள் செய்கிற எல்லாவற்றையும் உம்முடைய ஆளுகையினாலே நடத்தியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
2. எல்லாம் வல்ல ஆண்டவரே, நித்திய பிதாவே, உமது பிரமாணங்களின் வழிகளிலும், உமது கற்பனைகளுக்கிசைந்த செயல்களிலும் ஈடுபட எங்கள் உடலையும் வாழ்க்கையையும் வழிநடத்தி, தூய்மைப்படுத்தி, ஆளுகை செய்யும். இவ்வாறாக இங்கும், எப்பொழுதும், எங்கள் உடலும் உள்ளமும் உமது வல்லமையால் பாதுகாக்கப்படச் செய்யும். எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம்.
1. ஆண்டவரே, எங்கள் அந்தகாரம் நீங்க வெளிச்சம் தந்து, இந்த இராவில் நேரிடும் சகல மோசங்களுக்கும் விக்கினங்களுக்கும் உமது மிகுந்த இரக்கத்தினால் எங்களைக் காக்க வேண்டுமென்று, உம்முடைய ஒரே குமாரனும் எங்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பினிமித்தம் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
2. இரக்கமுள்ள ஆண்டவரே பிரசன்னமாயிரும் இராப்பொழுதில் எங்களைப் பாதுகாரும், விரைந்தோடும் உலகின் மாறுதலாலும், எதிர்பாரா நிகழ்ச்சிகளாலும் பாதிக்கப்படும் எங்களை உமது நித்திய மாறாத நிலையில் தங்கச் செய்தருளுமாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
சர்வ வல்லமையுள்ள கடவுளே, சர்வ ஜீவ தயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும் மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும், நாங்கள் மிகுந்த தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் உமக்கு தோத்திரம் செலுத்துகிறோம். எங்களைச் சிருஷ்டித்ததற்காகவும் காப்பாற்றுகிறதற்காகவும் இம்மைக்குரிய எல்லா ஆசிர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம்... எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவரீர் செய்த உபகாரங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
**முடிவு ஜெபம்:** இத்தருனத்தில் ஒருமனப்பட்டு உம்மை நோக்கி எங்கள் பொதுவான விண்ணப்பங்களைச் செய்ய எங்களுக்குக் கிருபை அளித்த சர்வ வல்லமையுள்ள கடவுளே... இம்மையிலே உம்முடைய சத்தியத்தை அறிகிற அறிவையும் மறுமையிலே நித்திய ஜீவனையும் எங்களுக்குக் கட்டளையிட்டருளும். ஆமென்.
**ஆசீர்வாதம் 1:** நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களனைவரோடும் இருப்பதாக. ஆமென்
**ஆசீர்வாதம் 2:** தேவனுடைய இரக்கமுள்ள கிருபைக்கும் பராமரிப்புக்கும் உங்களை ஒப்படைக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியுமாகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக் கடவது. ஆமென்.