நற்கருணை ஆயத்த ஜெபம்
எல்லா இருதயங்களையும், எல்லா விருப்பங்களையும், எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிற சர்வ வல்லமை யுள்ள கடவுளே, நாங்கள் தேவரீரிடத்தில் பரிபூரணமாய் அன்பு கூரவும், உமது பரிசுத்த நாமத்தை உத்தமமாய் மகிமைப் படுத்தவும், உமது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எங்கள் இருதயத்தின் சிந்தனைகளைச் சுத்தம் பண்ணியருள எங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம்.
எல்லோரும் சேர்ந்து சொல்ல அல்லது பாட வேண்டியது :
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்மேல் பிரியமும் உண்டாவதாக. கர்த்தராகிய பராபரனே, பரம ராஜாவே, சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய தேவனே, உம்மைத் துதிக்கிறோம், உம்மைப் புகழுகிறோம், உம்மை வணங்குகிறோம், உம்மை மகிமைப் படுத்துகிறோம், உமது சிறந்த மகிமையினிமித்தம் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம்.
கர்த்தராயிருக்கிற ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, கர்த்தராகிய பராபரனே, பிதாவின் சுதனே, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிறவரே, எங்கள் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும். தேவனாகிய பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்களுக்கு இரங்கும்.
நீரே பரிசுத்தர், நீரே கர்த்தர், இயேசுகிறிஸ்துவே, தேவரீர் ஒருவரே, பரிசுத்த ஆவியோடே, தேவனாகிய பிதாவின் மகிமையிலே உன்னதமானவரா யிருக்கிறீர். ஆமென்.
நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நமது ஆண்டவர் தொகுத்து அருளியது: இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்; உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்பதே. (மாற்கு 12:29-31, மத்தேயு 22:36-40)
கர்த்தாவே எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். கர்த்தாவே எங்களுக்கு இரங்கி, கனிவுடன் இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள இதயத்தை ஏவியருளும். கர்த்தா எம் நெஞ்சிலிந்தக் கற்பனைகள் யாவையுமே நித்தம் பதித்தருள்க, நேசப் பரம்பொருளே
பிரியமானவர்களே, நாம் இப்பொழுது கடவுளுடைய மகா பரிசுத்த வசனத்தைக் கேட்கவும், ஆண்டவருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் பெற்றுக் கொள்ளவும் இங்கே கூடி வந்திருக்கிறோம். உத்தம மனஸ்தாபத்தோடும், உண்மையான விசுவாசத்தோடும் அவரிடத்தில் கிட்டிச் சேருவதற்காக கடவுளுடைய கிருபையைத் தேடி, முழங்காற்படியிட்டு, அமைதியாக நம்மை நாமே சோதித்து அறிவோமாக.
எல்லோரும் முழங்கால்படியிடவும், சற்று நேரம் அமைதியாக யிருந்த பின் குரு சொல்வது:
நமது பாவங்களினிமித்தம் முழு இருதயத்தோட உண்மையாய் மனஸ்தாபப்பட்டு, பிறரிடத்தில் அன்பும் சிநேகமுமாயிருந்து, இனி கடவுளுடைய கற்பனையைக் கைக்கொண்டு புதிதாக்கப்பட்டவர்களாய், அவருடைய பரிசுத்த மார்க்கத்தில் நடப்போம் என்று தீர்மானித்திருக்கிற நாம் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சர்வ வல்லமையுள்ள கடவுளோடு ஒப்புரவாகும்படி, மறுபடியும் நம் பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிடுவோம்.
எல்லோரும் சேர்ந்து சொல்வது:
பரம பிதாவே, உமக்கு விரோதமாகவும் எங்கள் அயலாருக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தோமென்று அறிக்கையிடுகிறோம். ஒளியில் நடவாமல், இருளில் நடந்து வந்தோம். கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லியும், தீமையைவிட்டு விலகவில்லை. எங்களுக்கு இரங்கவேண்டு மென்று உம்மிடம் மன்றாடுகின்றோம். இயேசு கிறிஸ்துவினிமித்தம், எங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும். உமது பரிசுத்த ஆவியால் எங்களை சுத்திகரித்து எங்கள் மனச்சாட்சியை உயிர்ப்பித்தருளும். உமது பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனி புது ஜீவனுள்ளவர்களாய் உமக்கு ஊழியம் செய்யத்தக்கதாக மற்றவர்களுக்கு மன்னிக்க எங்களுக்கு உதவி புரியும்.
குரு எழுந்து நின்று சொல்வது: இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தம்மிடத்தில் உண்மையாய் மனந்திரும்புகிற யாவருக்கும் அருளப்படுகிற கிருபை நிறைந்த அருள் வாக்கைக் கேளுங்கள்.
சற்று நேரம் அமைதி – பின் குரு சொல்வது:
நம்முடைய பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள கடவுள், உத்தம மனஸ்தாபத்தோடும் உண்மையான விசுவாசத்தோடும் தம்மிடத்திற்கு மனந்திரும்பி, தங்கள் சகோதர, சகோதரிகளின் குற்றங்களை மன்னிக்கிற யாவருக்கும் பாவமன்னிப்பை அருளிச்செய்வோம் என்று மிகுந்த இரக்கமாய் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் உங்களுக்கு இரங்கி, உங்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து அவைகளினின்று உங்களை விடுதலையாக்கி, சகல நன்மையிலும் உங்களை உறுதிப்படுத்தி, நிலைநிறுத்தி, உங்களை நித்திய ஜீவ கரையில் சேர்ப்பாராக. ஆமென். தேவரீருக்கே தோத்திரமுண்டாவதாக.
வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை. கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
அறிவிப்புகள் காணிக்கைப்பாடல் ஜெபங்கள்
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட எப்பொழுதும் இருப்பதாக. ஆமென்.