🙏 துணைப்பாடல்கள் & ஜெபங்கள்

பொதுவான ஸ்தோத்திர ஜெபம்
பொதுவான ஸ்தோத்திர ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, சர்வ ஜீவ தயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும் மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும், நாங்கள் மிகுந்த தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் உமக்கு தோத்திரம் செலுத்துகிறோம். எங்களைச் சிருஷ்டித்ததற்காகவும் காப்பாற்றுகிறதற்காகவும் இம்மைக்குரிய எல்லா ஆசிர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம், விசேஷமாய் எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக்கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாயிருக்கவும், எங்களை உமது ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவரீர் செய்த உபகாரங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும் எல்லா மேன்மையும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.