🙏 துணைப்பாடல்கள் & ஜெபங்கள்

ஈஸ்டர் சிறப்பு பாடல்
கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளாகிய ஈஸ்தர் பண்டிகை

காலை ஜெப ஒழுங்கில் “கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி” என்னும் சங்கீதத்துக்குப் பதிலாக இதனடியில் வருகிற கீதங்களை ஈஸ்தர் பண்டிகையிலும் அதன் பின்னர் வரும் ஏழு நாட்களிலும் பாட அல்லது சொல்லவேண்டும்.

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். 1 கொரிந்தியர் 5:6,7

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6:9-11

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15:20-22

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமையுண்டாவதாக
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக – ஆமென்