முதலாம் லித்தானியா
எல்லா மனிதருக்காகவும் ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் செய்து தோத்திரங்களைச் செலுத்த வேண்டுமென்று கற்பித்தருளின சர்வ வல்லமையுள்ள தேவனே
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
எங்குமுள்ள திருச்சபைக்குத் தேவரீர் உண்மையும் ஐக்கியமும் ஏகசிந்தையுமுள்ள மனதை இடைவிடாமல் அருளிச் செய்யும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
உம்முடைய திருநாமத்தை அறிக்கையிடுகிற யாவரும் உமது பரிசுத்த வசனத்தின் சத்தியத்தைக் குறித்து இசைந்த மனதுள்ளவர்களாயிருந்து தைரியத்தோடும் உண்மையோடும் அதற்குச் சாட்சி பகர அனுக்கிரகஞ் செய்யும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
சகல தேசத்தாரையும் நீதியின் பாதையிலும் சமாதான வழியிலும் நடத்தியருளும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
நாங்களும் மற்றெல்லா மனிதரும் தேவபக்தியோடும் சாந்தத்தோடும் ஆளப்படும்படி மனிதருடைய விஷயங்களில் அதிகாரம் வகிப்பவர்களையும் விசேஷமாய் இந்தியக் குடியரசின் ஜனாதிபதியாகிய ……ஐயும் எங்களை ஆளுகிறவர்களையும் உமது பரிசுத்தமும் சமாதானமுமான ஞானத்தால் நடத்தியருளும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
எல்லாப் பேராயர்களும் குருக்களும் டீக்கன்களும் விசேஷமாக…… என்னும் எங்கள் பிரதமப் பேராயரும்…… என்னும் எங்கள் பேராயரும் தங்கள் நடக்கையினாலும் போதகத்தினாலும் சத்தியமும் ஜீவனுமுள்ள உமது வசனத்தைப் பிரசித்தப்படுத்தி உமது பரிசுத்த சாக்கிரமெந்துகளை ஒழுங்காயும் செம்மையாயும் கொடுக்க அவர்கள் அனைவருக்கும் உமது கிருபையை அருளிச் செய்யும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
சகல தேசத்தாருக்குள்ளும் உமது சுவிசேஷம் பரவும்படி உழைத்துவரும் யாவரையும் வழிநடத்தி ஆசீர்வதித்து எல்லாக் கல்விச்சாலைகளையும் வித்தியாலயங்களையும் வைத்தியசாலைகளையும் உமது ஆவியானவரால் பிரகாசிப்பித்தருளும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
உமது பரம ஆதரவினாலே நாங்கள் பஞ்சத்தினின்றும் வறுமையினின்றும் காக்கப்பட்டு பூமியின் நற்பலன்களை அதனதன் காலத்தில் நன்றியறிதலான இருதயத்தோடு அனுபவிக்கும்படி எங்களுக்குக் கிருபை செய்தருளும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
உம்முடைய ஜனங்கள் எல்லாரும் விசேஷமாய் இவ்விடத்தில் கூடிவந்திருக்கிற இந்தச் சபையாரும் சாந்த இருதயத்தோடும் தகுந்த வணக்கத்தோடும் உமது பரிசுத்த வசனத்தைக் கேட்டு உட்கொண்டு தங்கள் வாழ்நாளெல்லாம் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்களாய் உமக்கு உத்தம ஊழியஞ்செய்ய அவர்களுக்கு உமது பரம கிருபையைக் கொடுத்தருளும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
நிலையில்லாத இந்த ஜீவகாலத்தில் துன்பம் துக்கம் வறுமை வியாதி முதலான உபத்திரவங்களால் வருத்தப்படுகிற யாவரையும் உமது தயவினாலே தேற்றி ஆதரித்தருளும்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.
உம்மிடத்தில் விசுவாசமும் பயபக்தியுமுள்ளவர்களாய் ஜீவித்துப்போன உமது அடியார் எல்லாருக்காகவும் நாங்கள் உம்மைத் துதித்து அவர்களோடுகூட நாங்களும் உமது பரம இராஜ்யத்தில் பங்குபெறும்படி அவர்கள் காட்டிய நல்மாதிரியைப் பின்பற்ற எங்களுக்குக் கிருபை செய்தருளவேண்டும் என்று பிராத்திக்கிறோம்:
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.